பரதனைக் குகன் வணங்கிப் பாராட்டி நெகிழ்தல்
2336. கேட்டனன், கிராதர் வேந்தன்;
     கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்;
     விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன்
     சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல்
     உள்ளத்தன், புகலலுற்றான்;

    கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் -
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
கி
- மேல் எழுந்து  மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் - (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து  வணங்கி; உவகை வீங்க - மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் - உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் -
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் -
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் - இறுக அணைத்த
கையுடனே;பொய்யில் உள்ளத்தன் - பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் - சில வார்த்தைகள் சொல்லலானான்.

     ‘மீட்டும்’ - என்பதற்குத் ‘திரும்பவும் மண்ணில் விழுந்து வணங்கினான்’
எனப் பொருள் உரைத்து, உம்மையால் முன்பொருமுறை ‘அடி
வீழ்ந்ததோடன்றி’ என்றுரைத்து2334 ஆம் பாடலில் ‘அடி வீழ்ந்தான்’
என்பது குகன் செயலே என்பார் உளர். ‘மீட்டும்’ என்பதில் ‘ம்’ என மகர
ஒற்றுக் கொள்ளுதலும் கொள்ளாமையும் உண்டு. இருவகைப் பாடத்தினும்
மகர  ஒற்றுக் இன்றி மீட்டு’ என்ற பாடமே சிறந்ததாகும். ஓசை நயம்
உணர்வார்க்கு ‘மீட்டு மண்’ என நிற்றலே ஏற்புடைத்தென அறிவர். ‘மீட்டு’
என்பது  உயிர்ப்பை மீட்டு என உரை பெறும். பரதன் கூறிய
வார்த்தைகளைக் கேட்டுக் கிளர்ந்தெழும் உயிர்ப்பைப் பெற்ற குகன்,
அவ்வுயிர்ப்பை மீட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே வேறு
செயல் செய்யமுடியும். ஆதலின், அவ்வுயிர்ப்பை மீட்டு (10161, 10162
பாடல்களை இங்கு நோக்குக). மண்ணதனில் வீழ்ந்தான் என்றது பொருந்தும்.
‘மீட்டும்’ என்று இருப்பினும் முன்பு வணங்கினான் இப்போது ‘மண்ணதனில்
வீழ்ந்தான்’ என்று அதன் வேறுபாட்டை உணர்த்துமே அன்றி வேறன்று.
மூத்தவனாகிய குகன் இப்போது மண்ணில் வீழ்ந்து வணங்குதல் தகுமோ
எனின், இருவர் இணையும்போது முதற்கண் இளையோர் மூத்தோரை
வணங்குதலும், அவ்வாறு வணங்கிய இளையோரை மூத்தோர் எடுத்துத்
தழுவி விசாரித்தலும் இயல்பு. இங்கு, தான் வந்த நோக்கத்தைப் பரதன்
கூறக் கேட்ட குகனுக்குப் பரதன் பரதனாகவே காட்சி அளிக்கவில்லை.
அவன் தம்பி முறையும் புலனாகவில்லை. அவனை ஆயிரம் இராமர்களுக்கும்
மேலாகவே கருதுகிறான். அதனால் ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ
தெரியின் அம்மா’ என்று வியந்து பேசுகிறான். ஆகவே, ஆயிரம்
இராமர்களுக்கும் மேம்பட்டவனாகப் பரதனை எண்ணிய குகன், இராமன்
காலில் விழுந்து பணிவது முறையானாற் போல, பரதன்
காலிலும் விழுந்து பணிந்தான் ஆதலின் தகும் என்க. இதனை விளக்கவே
கம்பர் கவிக் கூற்றாகப் “புளிஞர்கோன் பொருஇல் காதல் அனையவற்கு
அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பிலாதார்? நினைவு
அருங்குணங்கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்” (2339) என்று
தாமே முன்வந்து பேசுவாராயினர். பரதனது குணங்களில் ஈடுபட்டு
அவனைப் பணிந்தான்; இராமகுணங்கள் எங்கிருந்தாலும் அங்குப் பணிதல்
இராமனைப் பணிதலே அன்றோ? ஆகவே, அது தகாதது செய்ததாகாது;
அமைவிற் செய்ததாகவே ஆகும். விடை கொடுத்த படலத்துத் தன்
அடியனாய அனுமனை இராமன் “போர் உதவிய திண் தோளாய்
பொருந்துறப் புல்லுக” (10351) என்று தன்னைத் தழுவிக் கொள்ளச்
சொல்லியதையும் இங்குக் கருதுக. பொது நிலையில் முதற்காட்சியில்
அண்ணனாகிய குகனைப் பரதன் வணங்கினான் என்றும், சிறப்பு நிலையில்
இராம குணாநுபவத்தின் எல்லையைப் பரதன்பால் கண்ட குகன் இராமனிலும்
மேம்பட்டவனாகக் கருதி வேறு எதுவும் நோக்காது அன்பினான் அடியற்ற
மரம்போல் வீழ்ந்து கைகளைத் திருவடியிற் பூட்டி நெடிது கிடந்தான் என்றும்
கொள்க. அங்ஙனம் கிடந்த குகனைப் பரதன் எடுத்துத் தழுவியதாகக் கம்பர்
கூறாமையும் காண்க. “நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்” (2332) எனக்
குகன் முன்னரே கூறுதலின், இராமன் “எழுதரிய திருமேனி” (656)
உடையவனானாற்போல, “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும்.....வள்ளலையே,
அனையா’னா (657) கிய பரதனும், ‘தீட்டரு மேனி மைந்தன’் ஆயினன்.
“எழுது அரு மேனியாய்” (2105) என்று பள்ளி படைப் படலத்தின்கண்
கூறியதை ஈண்டு ஒப்பு நோக்குக.                                 34