2337. ‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!

     ‘புகழினோய்! - புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு - (உன்)
தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  தாதை
உதவிய
- (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த;  தரணி தன்னை -
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து - தீயவினை வந்து
சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி -
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை - (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து - என்ற காலத்தில்; தன்மை கண்டால் - (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் - ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர்
நின்கேழ்ஆவரோ - ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்
தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட
இவ்வாறு கூறினான். “தாமரைக் கண்ணன், காதல் உற்றிலன் இகழ்ந்திலன்“
(1382) என்ற இராமனது மனநிலையும், ‘தீவினை என்ன நீத்து’ என்ற பரதனது
மனநிலையும் ஒப்பிடுக. இவையெல்லாம் இராமபிரானைக் குறைத்துக்
கூறுவேண்டும் என்று குகன் கருதியதன்று; பரதனது மேன்மைக் குணத்தைப்
பாராட்டும் முகமாகக் கூறியதாம்; எங்ஙனமெனின் இத்தகைய
குணச்சிறப்புகளால் உயர்ந்த பரதனைப் பாராட்டப்படும்பொழுதும் “ஆயிரம்
இராமர்” என்று குகனுக்கு இராமனே அளக்கும் பொருளாய் வந்து நிற்பது
கொண்டு அறியலாம். “உள்ளத்தின் உள்ளதை உரையின் முத்துற, மெள்ளத்
தம் முகங்களே விளம்பும்” (6452) “அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்” (குறள். 706) ஆதலின், பரதனது உள்ளத்
துன்பம் அவனது முகத்தில் நின்றபடியைச் ‘சிந்தனை முகத்தில் தேக்கி’
என்றுரைத்தார். ‘அம்மா’ என்பது வியப்பிடைச் சொல்.                35