இராமன் தங்கிய இடம் எது? எனப் பரதன் குகனைக் கேட்டல்  

2340. அவ் வழி அவனை நோக்கி,
     அருள் தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல்,
    தென் திசைச் செங் கை கூப்பி,
‘எவ் வழி உறைந்தான் நம்முன்?’
     என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்;
     எழுக!’ என்றான்.

    அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்;  அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து  வணங்கி;
‘நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ - எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் - என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன்
- வேட அரசனாகிய குகன்; ‘வீர! - வீரனே!; இவ் வழி -
இவ்விடத்தில்; யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்;  எழுக’ - என்னுடன் புறப்படுவாயாக;என்றான் -.

     ‘தென் திசைச் செங்கை கூப்பி’ - ‘திசை நோக்கித் தொழுகின்றான்’
(2332.)  எனமுன்னர் வந்ததும் காண்க. ‘இவ்வழி’ என்பதற்கு ‘இந்த
இடமாகும்’ என்று குகன் அவ்விடத்தையும்காட்டிச் சுட்டிச் சொல்லியதாக
முடித்துக் காட்டலும் ஒன்று.                                    38

          இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும்