2341. | கார் எனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லின், வார் சிலைத் தடக் கை வள்ளல், வைகியபள்ளி கண்டான்; பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற்பரவை புக்கான்- வார் மணிப் புனலால் மண்ணை மண்ணுநீர்ஆட்டும் கண்ணான். |
(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் - மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் - கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய - தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து; பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து; பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப் புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்; மண்ணை - பூமியை; மண்ணு நீர் ஆட்டும் - திருமஞ்சனத் தண்ணீரால் குளிப்பாட்டுகின்ற; கண்ணான் - கண்ணுடையவனாக ஆனான். பரதன் மனத்தின் பதைபதைப்பும், அதனால் ஏற்பட்ட துன்பமும், அதன்வழி உண்டாகின்ற கண்ணீர்ப்பெருக்கும் மிகுந்த படியைக் கூறினார். இராமபிரான் வைகியஇடத்தைத் திருமஞ்சனம் ஆடடினான் என்பது போலக் கூறியது கவிநயம் - “ மண்ணக மடந்தையை மண்ணுநீர் ஆட்டி (பெருங். 1-49-89) என்பது போல. ‘கார் என’ என்கின்ற உவமை பரதனது திருமேனிநிறம், அவன் விரைந்து சேறல், பின் நீர்பொழிதல் (கண்ணீர்) ஆகிய அனைத்துக்கும்பொருந்துதல் அறிந்து மகிழத்தக்கது. |