2342. | ‘இயன்றது, என் பொருட்டினால், இவ் இடர் உனக்கு என்ற போழ்தும், அயின்றனை, கிழங்கும் காயும் அழுது என; அரிய புல்லில் துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்; சுடரும் காசு குயின்று உயர் மகுடம் சூடும்செல்வமும் கொள்வென் யானே!” |
உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற போழ்தும் - (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக உண்டாகியது என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும் காயும் அழுது என அயின்றனை - கிழங்கு, காய்முதலியவற்றை (அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது போல உண்டாய்; அரிய புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்; எனவும் - என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்- யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு குயின்று உயர் மகுடம் - ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் - சூட்டிக்கொள்ளும்அரசச் செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும். பரதன் தன்னைத் தானே நொந்து உரைத்துக்கொள்வதாகக் கொள்க. தன்னால்தான்இத்தகைய துன்பங்கள் இராமனுக்கு உண்டாகின என்று நைகிறான். அரண்மனையில் உண்பது அமுது ஆதலின்வனத்தில் உண்ணும் கிழங்கும் காயும் அமுதாயின. இன்னும் உயிர் வைத்திருப்பதும் உயிர் போகாமல் இருப்பதும் அரசுச் செல்வத்தையும் அநுபவிக்கவோ என்று நொந்து உரைத்தானாம். ‘ஏ’காரம் ஈற்றசை. 40 |