இலக்குவன் யாது செய்தனன் எனப் பரதன் குகனை வினாவுதல் 2343. | தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான்! ‘அந் நீண்டவன் துயின்ற சூழல் இதுஎனின், நிமிர்ந்த நேயம் பூண்டவன், தொடர்ந்து பின்னே போந்தவன், பொழுது நீத்தது யான்டு?’ என, இனிது கேட்டான்; எயினர்கோன், இதனைச் சொன்னான்; |
தூண்தர - தூணை ஒப்பாக; நிவந்த தோளான் - உயர்ந்த தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும் குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் - அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்; நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ் இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது - இரவுப் பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என - என்று; இனிது கேட்டான் - இனிமையாக வினாவினான்;எயினர்கோன் - வேட வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக்கூறினான். நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர். அதனால் நீண்டவன்என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றிவினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும் உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே ‘இனிது கேட்டான்’என்றார். 41 |