இலக்குவன் செயல்பற்றிக் குகனது விடை 2344. | ‘அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச, வில்லை ஊன்றிய கையோடும், வெய்து உயிர்ப்போடும், வீரன், கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- கண்கள் நீர் சொரிய, கங்குல் எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்’ என்றான். |
‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி உயர்ந்ததோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும்-இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும்- அந்தப் பிராட்டியும்; துஞ்ச - உறங்க; வீரன் - இலக்குவன்; வில்லைஊன்றிய கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்துஉயிர்ப்போடும்- வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய- தன்னிரண்டு கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும்- இரவு தன் முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன்- கண்கள் இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’-நின்றுகொண்டே (காவல் செய்து) இருந்தான்; என்றான் - அவள் - நெஞ்சறிசுட்டு. அஃதாவது சொல்லும் குகனுக்கும், கேட்கும் பரதனுக்கும் கேட்டஅளவிலே அது யாரைச்சுட்டுவது என்பது அவர்கள் மனத்தால் அறியப்படுதலின், ‘வில்லை ஊன்றிய கை’என்றது நெடுநேரம் நிற்பதற்கு ஊன்றுகோலாக வில்லக் கொண்டகை என்பதாம். ‘நயனம் இமைப்புஇலன்’ சினைவினை முதலொடு முடிந்தது “சினைவினை சினையொடும் முதலொடும் செறியும்” ஆதலின்.(நன். 345.) ‘கண்கள் நீர் கொரிய’ என்றவர், மீண்டும் ‘இமைப்பிலன் நயனம்’ என்றது இலக்குவன் உறங்காதிருந்து காத்த பேரன்பில் குகனது ஈடுபாட்டை உணர்த்தியது. இலக்குவன்உறங்காது காத்தமையைக் கங்குல் எல்லை காண்பளவும் கண்டு குகன் கூறினான். ஆகவே, குகனும்உறங்காதிருந்தமை தானே பெறப்படுதல் காண்க. “வரிவில் ஏந்திக் காலைவாய் அளவும் தம்பிஇமைப்பிலன் காத்து நின்றான்” “துஞ்சலில் நயனத் தைய சூட்டுதி மகுடம்” என (1974, 6505.) வருவனவற்றையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க. பிராட்டியை இங்கே குகன் ‘அவள்’ என்ற சேய்மைச்சுட்டால் கட்டியது தேருந்தொறும் இன்பம் பயப்பது. ஐந்து வார்த்தைகளால் இராமனைக் கூறியவன்பிராட்டியை எட்டியும் கட்டியம் சொல்ல இயலாது எட்ட நின்றே பேசுகிறான். - கம்பர் இராமனை‘மையோ மரகததோ மறிகடலோ மழைமுகிலோ” (1926.) என்று சொல்லிப் பார்த்துப் பிறகு ‘ஐயோ’என ஆற்றாமை மேலிட்டார் - ஆனால், பிராட்டியைச் சொல்லமாட்டாமலே “ஒப்பு எங்கே கண்டுஎவ்வுரை நாடி உரைசெய்கேன்” என்று நாத் தழுதழுக்கக் (503) காண்கிறோம். ஆகவே, வரம்பில்லாப் பேரழகினாளை எதனால் எவ்வாறு சொல்வது என்றறியாத ஏழைமை வேடன் ‘அவள்’ என்ற வார்த்தையால் சொல்லி அமைத்தான் என்னலே போதுமானது. 42 |