குகன் கட்டளையிட, நாவாய்கள் வருதல்  

2347. ‘நன்று’ எனப் புளிஞர் வேந்தன்
     நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன-
     சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என,
     குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு
     உருவு கொண்டனைய ஆன,

     (பரதன் கூறியது  கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன்
- தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன
- (நீங்கள்) சென்று  இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என
- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என -
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல;  குபேரன் மானம் என - (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது  புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி -
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன
- அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

     பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை
வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு
வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன்
வந்தது. ‘குபேரன் மானம் என’ என்று ‘என’ வைப் பிரித்துக் கூட்டுக.    45