நாவாய்களின் தோற்றப் பொலிவு  

2348. நங்கையர் நடையின் அன்னம்
     நாண் உறு செலவின் நாவாய்.
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன -
     கலந்த எங்கும், -
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,
     அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
     இருவினை என்னல் ஆன,-

    நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் - அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு - அக்கரையில்
உள்ளாரை  இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் - ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு - தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடு;  இங்கு - இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் -
ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம்,  பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன - என்று  சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன
- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கின;  எங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

     ‘அங்கொடு இங்கு’ என்று பொதுவாகக் குறிப்பிடினும், கங்கையின்
வடகரை நின்று தென்கரைக்குச் சேறலே இங்கு வேண்டப்படுதலின்
வடகரையில் ஏற்றித் தென்கரையில்இறக்குதலே இங்கு உண்டு;
தென்கரையில் ஏறுவார் இலர் ஆதலின், புண்ணியம் மிக்கார் பூவுலகில்
நின்று அமரருலகு ஏறலும், புண்ணியம் அநுபவித்துத் தொலைத்த பிறகு
மீண்டும் பாவத்தை அநுபவிக்கமண்ணுலகு சேறலும் ஆகியவற்றுக்கு
இருவினை காரணமாக ஆதலின் இருவினைகளே மேலும் கீழும் ஏற்றி
இறக்குவ என்பது  கொண்டு அவற்றை நாவாய்களுக்கு உவமை ஆக்கினார்.
‘இழித்தி ஏற்றும்’ என்பது‘ஏற்றி இழித்து’ என மாற்றி உரைக்கப்பெற்றது.
இனி தென்கரையில் நின்று வடிகரையில்இறங்குவார் உளராயின்
இருதலையும் கொள்ளுத்லும் ஒன்று. அது உவமையோடு முழுதும்
பொருந்திற்றாம். நாவாய்களின் நடை நங்கையர் நடை போன்றது.
செல்கை அன்னம்  நாணப்படும்படி  உள்ளது  என்க;மெல்ல மெல்ல,
அசைந்து  செல்லுதலால். “அன்னப்பேட்டை சிறை இலதாய்க் கரை,
துன்னிற்றென்னவும் வந்தது தோணியே” (2372.) என்றதும் நோக்குக.     46