பரதன் சேனைகள் கங்கையைக் கடத்தல் 2349. | ‘வந்தன, வரம்பு இல் நாவாய்; வரி சிலைக் குரிசில் மைந்த! சிந்தனை யாவது?’ என்று, சிருங்கிபேரியர்கோன் செப்ப, சுந்தர வரி விலானும் சமந்திரன்தன்னை நோக்கி, ‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி, விரைவின்’ என்றான். |
சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில் உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) ‘வரிசிலைக் குரிசில் மைந்த - கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள் வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள் மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!; இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப் படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான். சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். ‘வரிசிலைக் குரிசில்’ என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் ‘சுந்தர வரிவிலானும்’ என்று இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர் ஒட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன். ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன். எந்தை - அண்மைவிளி. 47 |