2351. | இடிபடு முழக்கம் பொங்க, இன மழை மகர நீரை முடிவு உற முகப்ப, ஊழி இறுதியின் மொய்ப்ப போலக் கொடியோடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின, நெடுங் கை வேழம். |
இன மழை - கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க - ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி இறுதியின் - யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை - கடல் நீரை; முடிவுஉற முகப்ப - அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப போல - நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடுவங்கம் - கொடியோடு கூடிய கப்பல்; வேலை - கடலின்கண்; கூம்பொடு - பாய்மரத்தோடு; படர்வ போல - செல்வன போலவும்; நெடுங்கை வேழம் - நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி - தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச் சென்றன. மகரம் என்பது கறாவைக் குறிக்கும். அதனை உடைய நீர் எனவே கடல் ஆயிற்று. கங்கையில் நீந்திச் செல்லும் யானைகளுக்கு இரண்டு உவமைகள் கூறினார் - ஊழிக்காலத்து மேகங்கள் ஒன்றாய்க் கடல்நீரை வற்றக் குடிப்பன போலவும், கப்பல் பாய்மரத்துடன் கடலில் செல்வது போலவும் என. 49 |