2352.சங்கமும் மகர மீனும்,
     தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து
     தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
     கரை ஒரீஇப் போயிற்று அம்மா -
கங்கையும் இராமற் காணும்
     காதலது என்ன மாதோ!

     மானம்- பெருமை பொருந்திய; பொங்கு - மேல்கிளம்பிய;
வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க- தள்ளுதலால்; சங்கமும்
மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி- சங்கு, சுறாமீன், முத்து,
மணிக்கற்கள்ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும்-
மரக்கலங்களையுடையநீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்துபடர -
தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை -கங்கா நதியும்; இராமன்காணும்
காதலது என்ன
- இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி;
கரை ஒரீஇப் போயிற்று - கரை கடந்து  சென்றது.

     யானைகள் கங்கையில் நீந்தித் தென்கரை செல்லும்போது,  கங்கைத்
தண்ணீர்தள்ளப்பட்டுக் கரைக்கு மேலே பரவி யானைகளுக்கு முற்பட்டுத்
தென் கரை அடைவது, கங்கையேஇராமனைக் காணும் காதலால் செல்வது
போன்றது  என்று தற்குறிப்பேற்றம் செய்தார்.தற்குறிப்பேற்றவணி. அம்மா
வியப்பிடைச் சொல். மாது,  ஓ - அசை.                           50