2354. கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும்,
     கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும்; யாவும்,
     நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும்
     வேறு வேறு ஏற்றிச் சென்ற -
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என -
     வயிரத் தேர்கள்.

    வயிரத் தேர்கள்- வலிய இரதங்கள்; கொடிஞ்சொடு -
கொடிஞ்சியுடன்; தட்டும் -தேர்த்தட்டும்; ஆழியும் - சக்கரமும்; கோத்த
மொட்டும்
- இணைத்தமொட்டும்; நெடுஞ்சுவர்க் கொடியும் - நீண்ட
இருபக்கச் சுவர்களின் மேல் கட்டியகொடியும்;  யாவும் - பிறவற்றையும்;
நெறிவரு முறையின் நீக்கி - முறைப்படியான வகையில்தனித்தனியாகப்
பிரித்து; விடும் சுவல் புரவியோடும் - (கத்தரியாது) விட்டு வளர்ந்த
பிடரியை உடைய குதிரையோடும்; வேறு வேறு - தனித் தனியாகப்
படகுகளில் எற்றி அக்கரை கொண்டுசெல்லப்பட்டன. (எவ்வாறு உளது
எனில்); மடிஞ்சபின் - இறந்த பிறகு (அவ்வுயிர்க்கு); உடம்பு கூட்டும்
வினை என
- வேறு உடம்பினைக் கூட்டுகின்ற வினைபோல; ஏற்றிச்
சென்ற
- ஏற்றிச் செல்லப்பட்டன.

     கொடிஞ்சி - தேர் முன்னே தாமரை வடிவாக நடப்படும் உறுப்பு.
தேரில் அமர்வார்கைப்பிடித்தற்குப் பயன்படும் என்க. “நெடுந்தேர்க்
கொடிஞ்சி பற்றி” (புறநா. 77) என்பதுகாண்க. தட்டு - தேர்த்தட்டு
இருக்கை என்க. அச்சும், ஆழியும் தேரின்கீழ் உள்ளவை. கோத்த
மொட்டும் தேர்க் கால்களை ஒன்றோடொன்று இறுக்கிப் பிடிப்பவை.
நெடுஞ்சுவர் - தேர்ப்பலகைகள். கொடி - மேல் உள்ளது.  தேர்களை
அவ்வாறே கொண்டு செல்ல முடியாது. ஆகையால், பிரித்துப் படகுகளில்
ஏற்றி அக்கரை சென்று  மீண்டும் இணைத்து உருவாக்கினர் என்க.
உடம்பிலிருந்து உயிரைப் பிரித்து வேறொரு உடம்பில் அதனைச் சேர்க்கும்
வினை போல என்றார்.உயிர் போனபிறகு கை கால் முதலிய உறுப்புகள்
பிரிந்தவழி அவற்றை மீண்டும் ஒன்று சேர்ந்துஉடம்பினைச் செய்யும்
ஸந்தானகரணியென்னும் வித்தையையே ஈண்டு வினை என்பாரும் உளர்.
‘சென்ற’என்பது  தேர்கள் என்பதற்கு ஏற்பச் ‘செல்லப்பட்டன’ எனச்
செயப்பாட்டு வினையாகப் பொருள்உரைக்கப்பட்டது.                 52