2355. | நால் - இரண்டு ஆய கோடி, நவை இல் நாவாய்கள் மீதா, சேல் திரண்டனைய ஆய கதியொடும், நிமிரச் சென்ற - பாலி திரண்டனைய மெய்ய, பயம் திரண்டனைய நெஞ்ச, கால் திரண்டனைய கால, கடு நடைக் கலினப் பாய் மா. |
பால் திரண்டனைய மெய்ய-பால் திரண்டாற்போன்ற (வெள்ளிய) உடம்பை உடையன; பயம் திரண்டனைய நெஞ்ச-அச்சம் திரண்டாற் போன்ற (திடுக்கிடும்) மனம் உடையன; கால் திரண்டனையகால - காற்று ஒன்றுகூடினாற்போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை உடையன; கடுநடை - விரைந்து செல்லும்நடையை உடைய;கலினம் - சேணம் அணிந்த; பாய்மா - பாயும் குதிரைகள்; நால்இரண்டு ஆய கோடி- எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும்- சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவைஇல் நாவாய்கள் மீது-குற்றமற்ற படகுகளின் மேலாக; நிமிரச்சென்ற- நிமிர்ந்து சென்றன. “ஆயிரம் அம்பிக்கு நாயகன்” (1953.) என வருதலின் நால் இரண்டாய கோடி பாய்மாக்கள் என உரைக்க. புதிய இடம் கண்டால் மருளுதல் குதிரைகளுக்கு இயல்பு ஆதலின், ‘பயம் திரண்டனையநெஞ்ச’ என்றார். ஓடுகின்ற பெருவெள்ள நீரில் யானைகள்போல நிலைத்து நீந்தல் குதிரைகளால்இயலாது என்பது கருதி நாவாய்கள் மீதாச் சென்றனஎன்றார். 53 |