2357. | பொலங் குழை மகளிர், நாவாய்ப் போக்கின் ஒன்று ஒன்று தாக்க, மலங்கினர்; இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க, அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர, அங்கம் இங்கும் கலங்கலின், வெருவிப் பாயும் கயற்குலம் நிகர்த்த, கண்கள். |
நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் - செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க- ஒன்று மற்றொன்றோடு மோத; பொலங்குழை மகளிர் - (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை அணிந்த மகளிர்; மலங்கினர் - மனம் கலங்கி; மறுகினர் - மயங்கி; வெருவி - அச்சமுற்று; இரண்டு பாலும் நோக்க - இரண்டுபக்கமும் பார்க்க; கண்கள் - (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்; அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர - அசைகின்ற நீர்ப்பெருக்குத் தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் - ஆற்று நீர் அங்கும் இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் - பயந்து துள்ளுகின்ற; கயற்குலம் நிகர்த்த - மீன் கூட்டத்தைஒத்துள்ளன. கலத்தின் மோதலால் பயந்து மிரளும் மகளிர் கண்களுக்கு, கலம் செல்லும் வேகத்தால்தள்ளப்படும் நீரில் பயந்து துள்ளும் கயல்மீன்கள் உவமையாயின. திடுக்கெனத் தோன்றும்அச்சத்தை வெரூஉதல் என்னும் மெய்பபாடு என்பர். 55 |