2358. | இயல்வு உறு செலவின் நாவாய், இரு கையும் எயினர் தூண்ட, துயல்வன துடிப்பு வீசும் துவலைகள், மகளிர் மென் தூசு உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அறத் தளிப்ப, உள்ளத்து அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா! |
இயல்பு உறு செல்வின் நாவாய்-இயல்பாகப் பொருந்திய செலவினை உடைய மரக்கலங்கள்; இரு கையும் எயினர் தூண்ட- இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்; துயல்வன துடுப்பு- அசைவனவாகிய துடுப்புகள்; வீசும் துவலைகள்- வீசுகின்ற நீர்த்துளிகள்; மகளிர் - (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு -மெல்லிய ஆடை; உயல்வு உறு - மறைந்து பொருந்திய; பரவைஅல்குல் - பரந்த அல்குலை;ஒளிப்பு அற தளிப்ப - மறைவு நீங்க வெளித்தோன்றச் செய்ய; உள்ளத்து அயர்வுறும் - (இராமன்வனம் புகுந்த நாள்முதலாகப் போகம் இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு- மனவலிமை உடைய வீரர்களுக்கு; அயா வுயிர்ப்பு-வருத்தத்திலிருந்து நீங்குதலை; அளித்தது - உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது. துடுப்பு வீசும் துளிகளால் மகளிர் ஆடை நனைந்தது; அல்குல் வெளித்தோன்றியது; மைந்தர்க்குமகிழ்ச்சி விளைந்தது என்க. கோசல நாட்டு வீரர்கள் இராமன் வனம் புகுந்தது முதல் சோகத்தில்மூழ்கினர். அவர்கள் மகளிரும் சோகத்தில் இருந்தனர். ஆதலின், போகம் இன்றி இருத்தலால் அயர்வு உண்டாயிற்று. போக உறுப்புகள் காணப்பட்டபடியால் மைந்தர்க்கு அயர் நீங்கியதுஎன்றார். துக்கம் பரதன் முதலானோர்க்கு இருக்கும் அன்றி இராமனை அழைத்து வரச் செல்கிறோம்என்று கருதிச் செல்லும் வீரர்களுக்கும் இருக்கவேண்டும் என்பது இல்லை யாதலின் அவ்வீரர் போகவாய்ப்பை நாடினர் என்று சிருங்காரசம் படக் கூறினார்; உலகியல் அறிந்தவர் கம்பர்என்பதை இது விளக்கும. ‘அம்மா’ வியப்பிடைச் சொல். ‘ஒளிப் புறத்து அளிப்ப’ என்று பாடம்தந்து பிரித்து அல்குலின் ஒளியைப் புறத்து அளிப்ப என்று உரை கூறலாம் எனில் அல்குலுக்கு ஒலிஇல்லை; இருப்பதாகக் கூறிய மரபும் இல்லை ஆதலின், கூறலாகாமை உணர்க. 56 |