2361. ஆனனம் கமலத்து அன்ன,
     மின்அன்ன, அமுதச் செவ் வாய்
தேன் நனை, குழலார் ஏறும்
    அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை
    விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊறும்
    மானமே நிகர்த்த மாதோ!

     விரிந்த கங்கை - அகன்ற கங்காநதி; விண் என - ஆகாயம் ஆக;
சிந்து முத்தம் மீன் என - (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள்
விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் - தாமரை மலர் போன்ற
முகம்;  அமுதச் செவ்வாய் - அமுதமூறும் சிவந்தவாய் ஆகியவற்றை
உடைய;  மின் அன்ன தேன் நனை குழலார் - தேன் சிந்தும் கூந்தலை
உடைய மின்னலை ஒத்த மகளிர்;  ஏறும் அம்பிகள் - ஏறிச் செலுத்தும்
ஒடங்கள்;  வானவர் மகளிர் பண்ணை முற்றி - தேவ மகளிர்கள் நீர்
விளையாட்டை முடித்து;  ஊறும்மானமே நிகர்த்த - மேலேறிச்
செல்லுகின்ற விமானங்களை ஒத்தன.

     கங்கை நீர்ப்பரப்புக்கு ஆகாயம், கங்கை சிந்தும் முத்துகளுக்கு
நட்சத்திரங்கள்,மகளிர்க்குத் தேவமாதர், ஓடங்களுக்கு விமானங்கள்
உவமையாயின. பண்ணை - விளையாட்டு.“கெடவரல் பண்ணை
ஆயிரண்டும் விளையாட்டு” (தொல். சொல். உரி.21) என்பது  காண்க.
‘மாது’ ‘ஓ’ அசை.  அணிந்துள்ள மலர்களின் தேனால் நனைந்த கூந்தல்
என்க.                                                       59