2362. துளி படத் துழாவு திண் கோல்
     துடிப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில்
     நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன,
     கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட,
     உயிர் படைத்தனவே ஒத்த.

     துளிபட - துளிகள் உண்டாகும்படி;  துழாவு - (நீரைத்) துழாவுகின்ற;
திண்கோள்- வலிய கோலை உடைய; துடுப்பு - துடுப்புகள்; இரு காலின்
தோன்ற
-இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை
ஆற்றில
்- குளிர்ந்த நீரைஉடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும்
நாவாய்
- நண்டு என்று சொல்லும்படிசெல்கின்ற மரக்கலம்; களி உடைய
மஞ்ஞை அன்ன - களிப்பை உடைய மயிலை ஒத்த; கணங்குழை-
பொற்றோடு அணிந்த;  கயல்கண் - மீன் போன்ற கண்ணை உடைய;
மாதர் -மகளிரது;  ஒளிர் அடிக் கமலம் தீண்ட -  விளங்குகின்ற அடித்
தாமரைகள் படுதலால்; உயிர் படைத்தனவே ஒத்த - உயிர் பெற்றனவே
போன்றிருந்தன

     மகளிர் பாதம் பட்டத்தால் நாவாய்கள் உயிர்பெற்றன போன்றன
என்று தற்குறிப்பேற்றஉவமையாக்கினார். துடுப்புக் கம்புகள் இருபுறமும்
இருத்தல் கால்கள் போலத் தோன்றின. நண்டுஒதுங்கிச் செல்லும்
இயல்பினது  ஆதலின் நீரோட்டத்துக்கு ஏற்ப ஒதுங்கிச் சேறலின் நண்டு
போலும் நாவாய் என்றார்.                                        60