முனிவர் வான் வழியாகக் கங்கையைக் கடத்தல் 2363. | மை அறு விசும்பில், மண்ணில், மற்றும் ஓர் உலகில், முற்றும் மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ? கீழோர் செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்; மனத்தின் செல்லும் மொய் விசும்பு ஓடம் ஆக, தேவரின் முனிவர் போனார். |
(இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் - முனிவர்கள்; கீழோர்செய்வினை நாவாய்- கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற தொழிலமைந்தமரக்கலத்தை; ஏறித் தீண்டலர் - தீண்டி ஏறாதவர்களாய்; மனத்தில் செல்லும்மொய்விசும்பு ஓடமாக - மனத்தால் நினைத்த மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி; தேவரின் - தேவர்களைப் போல; போனார் - வான் வழியேசென்றார்கள்; மை அறு விசும்பில் - குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் - மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் - வேறோர் உலகிலும்; மெய்வினை - உண்மையானதொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ - தவமே அல்லாமல் அதற்கு மேற்பட்டதாகவேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை என்றபடி, “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்” (குறள்265) என்றவள்ளுவர் கூற்றும் காண்க! ‘முனிவர்கள் வான்வழியே சென்றார்கள்’ என்ற சிறப்புப் பொருளைத்“தவத்திற் சிறந்தது எவ்வுலக்திலும் இல்லை” என்ற உலகறிந்த பொதுப் பொருளால் முடித்தமையின்இது வேற்றுப் பொருள் வைப்பணி. “முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப், பின்னொடுபொருளை உலகறி பெற்றி, ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே” (தண்டி. 47) என்பவாதலின், மற்றும் ஒர் உலகு - கீழ் உலகுமாம். “தவம் செய்வார் தம்கருமம் செய்வார்”(குறள் 266) என்பது கருதி “மெய் வினை தவமே” என்றார். 61 |