சேனைமுதல் அனைவரும் கங்கையைப் கடத்தல்  

கலிவிருத்தம்

2364. ‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே.

    ‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று  இறுதிசெய் சேனையும் -
அறுபதாயிரம் அகௌஹிணிகள் என்று (கணக்கு) முடிவு செய்யப்பட்ட
சேனைகளும்; எல்லைதீர் நகர் - அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு
அறு மாந்தரும்
- குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் -
பெண்கள் கூட்டமும்;  செறி திரைக் கங்கை - நெருங்கிய அலைவீசுகின்ற
கங்கை; பின் கிடக்கச் சென்ற - கங்கையாறுபின்னிடும்படி போயின.

     “அக்குரோணிகள் மூன்று பத்து ஆயிரத்தி இரட்டி” என்று முன்பும்
(2307) கூறினார் ஆதலின்,இங்கே ‘இறுதிசெய் சேனை’ என்று கணக்கு
வரையரை செய்யப்பட்ட சேனை எனக் கூறினார். அக்குரோணிஎன்னும்
கணக்கு அப்பாடற் பகுதியுரையால் (2307) அறிக. பெரு நகரங்கள் மேலும்
மேலும் விரிந்துவளர்ச்சி பெறுவன ஆதலின், ‘எல்லை தீர் நகர்’ என்றாராம்.
மகளிர் வெள்ளம் கூறுதலின்மாந்தர் ஆடவரேயாம். ‘ஏ’ ஈற்றசை.       62