பரதன் நாவாயில் ஏறுதல்  

2365. சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான்தானும் ஏறினான்.

     சூழ்படை - (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் கழித்து
வருதுறையாற்றை
- நீர் கழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த
கங்கையாற்றை; கழித்து நீங்கியது  என - கடந்து சென்றதாக; கள்ள
ஆசையை அழித்து
- வஞ்சகமானமண்ணாசையைப் போக்கி;  அவனி
பண்டு ஆண்ட வேறு வேந்தரை  இழித்து
- (இம்) மண்ணுலகைமுன்பு
ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல்
ஏறினான்தானும் -மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் - (நாவாயின்
கண்) ஏறினான்.

     துறையின்கண் கழிக்கும் கங்கையாறு என்றார். ஆழமும் நீர்வரவும்
கழலை அதிகப்படுத்தும்.மண்ணாசையை வெற்றி கொண்ட பரதன் மற்ற
அரசர்களுக்கு மேம்பட்டான் ஆயினன். குணத்தால், பற்றற்ற தன்மையால்
மேல் ஏறினான் இப்போது  படகில் ஏறினான் என்று இருமுறை கூறியது
ஒரு நயம்.                                                    63