பரதன் குகனுக்குக் கோசலையை அறிமுகம் செய்தல்  

அறுசீர் ஆசிரிய விருத்தம்

2366. சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற
     கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று
     குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
     உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான்
     பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.

    குகன்-; சுற்றத்தார்- உறவினர்கள்;  தேவரொடும் - தேவர்களோடு;
தொழ - வணங்குமாறு;  நின்றகோசலையைத் தொழுது  நோக்கி -
இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து; ‘கொற்றத்தார்க்
குரிசில்!
- வெற்றிமாலை சூடிய பரதனே!; இவர் ஆர்? என்று வினவ-
இவர் யாராவார் என்று கேட்க; (அதற்குப் பரதன்) ‘கோக்கள் வைகும்
முற்றத்தான்
-அரசர்கள் (திறை தரக் குழுமித்) தங்கியிருக்கும் முன்றிலை
உடைய தயரதனது; முதல் தேவி- முதல் பட்டத்தரசி; மூன்று உலகும்
ஈன்றானை
-மூவுலகங்களும் (முன்பு) உண்டாக்கியபிரமதேவனை; முன்
ஈன்றானை
- முன்னால் (தனது திருஉந்திக் கமலத்தில்)தோற்றுவித்தருளிய
(ஸ்ரீ நாராயணன் திரு அவதாரமாகிய) இராமனை; பெற்றதால் பெறுஞ்
செல்வம
்- (தன் மகனாகப்) பெற்ற காரணத்தால் பெறவேண்டிய அரசச்
செல்வத்தை;  யான் பிறத்தலால்- நான் (கைகேயி மகனாகப் பின்னே)
பிறந்த காரணத்தால்; துறந்த - இழந்த; பெரியாள்’ - பெருமையுடையாள்;
என்றான் -.

     கோசலையின் முன்னைய ‘அரசன் தாய்’ என்ற நிலையும், இப்போதைய
நிலையும் தன்மனத்தைத் துன்புறுத்தத் தன்னை நொந்து பரதன் குகனுக்கு
விடை கூறினன் என்க. சக்கரவர்த்திதயரதன் ஆதலின் அரசர்கள்
அவனைக் கண்டு வணங்கவும் திறை செலுத்தவும் எப்போதும் திருமுற்றத்தே
காத்திருப்பர். ‘பெற்றதால்’ எதுகை நோக்கி, ‘பெற்றத்தால்’ என விரித்தல்
விகாரம்ஆயிற்று; செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று.  தொழுது  நோக்கி
‘இவர் யார்?’ என்று வினாயினன்குகன்.                            64