கோசலை குகனை அவர்களுக்குச் சகோதரனாக்கி உரைத்தல் 2368. | ‘நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி, மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள் கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னொடும் கலந்து, நீவிர் ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்’ என்றாள். |
(அதுகேட்ட கோசலைஅவர்களைப் பார்த்து); ‘மைந்தீர்’ - என் பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் -இனிமேல் நீங்கள் துன்பத்தால் வருந்தாமல்இருப்பீர்களாக; மெய்வீரர்- சுத்த வீரர்கனாகிய இராம இலக்குவர்கள்; நாடு இறந்து - கோசலநாடு கடந்து; காடு நோக்கி -வனத்தை நோக்கி; பெயர்ந்ததுவும்- புறப்பட்டுச் சென்றதுவும்; நலம் ஆயிற்று ஆம்அன்றே! - (இத்தகைய சிறந்தசகோதரனைத் தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல்திண்தோள் கை வீரக் களிறு அனைய காளை - மலை போன்ற வலிய தோளைஉடைய துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் - இந்தக் குகனோடும்; கலந்து- ஒன்றுபட்டு; நீவிர் ஐவீரும் -நீங்கள் ஐந்து பேரும்; அகல்இடத்தை - அகன்ற பூமியை; நெடுங்காலம் -நீண்டகாலம்;அளித்தீர்’ - அரசாட்சி செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள்-என்று சொன்னாள். ‘மைந்தீர்’! என்ற விளி பரத சத்துருக்கனர்களை நோக்கியது; குகனையும் உள்ளடக்கிக்கூறலும் ஒன்று, இதுகாறும் இராமன் வனம் புகுந்தது கொடிது என்று அனைவரும் கருதினர். ஆதலால், குகன் என்கின்ற சிறந்த துணைவனை அச்செயல் தந்தபடியால் (கைகேயி செய்த அச்) செயலும் நல்லதாயிற்று அன்றோ என்றாளாம். இது குகனைப் பாராட்டி உரைத்தது. “ஐவீரும் ஒருவீராய்” என்றதுகுகனை ஆசி கூறியதாக அமையும். ‘ஐவீரும் என்று குகனுக்கே கோசலையால் இவ்வாசி கிடைத்தது என்பதுஉணரற்பாலது. இராமனைக் காட்டுக்கு அனுப்பியதில் கைகேயிமாட்டுக் குகனுக்கு இருந்த சீற்றத்தையும்கோசலை இதனால் மாற்றித் தேற்றினள் என்னலாம். 66 |