சுமித்திரையைப் பரதன் குகனுக்கு அறிமுகம் செய்தல்  

2369. அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
     நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
     தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
     தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
     பயந்த பெரியாள்’ என்றான்.

   அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை-அறக்கடவுளே
என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை;
நோக்கி - (குகன்) பார்த்து; ‘ஐய!- பரதனே!; அன்பின் நிறைந்தாளை-
அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை’- (யார்
என்று எனக்குச்)சொல்; என்ன - என்று கேட்க; (பரதன்)‘நெறி திறம்பா-
சத்திய வழியில்சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை - தன் வாய்மையை;
நிற்பது  ஆக்கி - என்றும் நிலைபெறுவதாகச்செய்து; இறந்தான்தன்-
தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகியதயரதனது;
இளந்தேவி - இளைய பட்டதரசியாவாள்; (அதன்
மேலும்இவள்)
யாவர்க்கும்
- எல்லா மக்களுக்கும்; தொழுகுலம்ஆம் இராமன் -
வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு பிறந்தானும்உளன்
என்ன
- பின்னேபிறந்த தம்பியும் (ஒருவன்) உளம் என்று அனைவரும்
அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை-(இராமனை விட்டு) நீங்காத
இலக்குவனை; பயந்த - பெற்றெடுத்த;பெரியாள்’ -பெருமை  உடையவள்;
என்றான் - என்று சொன்னான். சொன்னான்.

     சுமித்திரை இலக்குவனுக்கு “ஆகாததன்றால் உனக்கு அவ்வனம்
இவ்வயோத்தி, மாகாதல் இராமன்அம் மன்னவன்....தாயர் சீதை என்றே
ஏகாய்” என்றும், “மகனே இவன்பின் செல் தம்பிஎன்னும்படி அன்று;
அடியாரின் ஏவல் செய்தி” (1751, 1752) என்றும் அறவுரைகளை அறிந்து
கூறியவள் ஆதலின் அறத்தின் வடிவம் எனப்பட்டாள். பின்பு பிறந்தார்
மூவாராயினும் பரதனும்சத்துருக்கனனுமாகிய தாம் இராமனுக்குத் துன்பம்
உண்டாகக் காரணமானோமே என்ற ஏக்கறவால்,‘பின்பு பிறந்தானும் உளன்
என்னப் பிரியாதான்” என்று இலக்குவனைச் சிறப்பித்தான். குகன்
இலக்குவனை அறிந்து. அவனையே இராமனாகக் கருதி,  ‘தேவா நின்கழல்
சேவிக்க வந்தனன்’ (1963)ன்று முன்னர்க் கூறியவன் ஆதலின் அவனை
வைத்துச் சுமித்திரையை அறிமுகப்படுத்தினான் பரதன்.அருகிருக்கும்
சத்ருக்கனனும் அவள் மகன் ஆயினும் அவன் தன்னைச்
சார்ந்திருந்துவிட்டபடியால்இலக்குவனைப் பெற்றதையே அவள்
பெருமையாகக் குறித்தாளாம். இவையனைத்துமே பரதன் சொல்லிலும்
செயலிலும் தன்னிரக்கத்தைப் பெரிதும் காட்டுவனவாய் அமைகின்றன.
‘பெரியாள்’ என்றுகோசலைக்குக் கூறிய பெயரையே இங்கும் கூறியது
கொண்டு கம்பர் வாக்கின் அருமை அறிந்து மகிழலாம்.               67