குகன் கைகேயியை யார் என வினவுதல்  

2370. சுடு மயானத்திடை தன் துணை ஏக,
     தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
     ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்,
     தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, ‘“ஆர் இவர்?”
     என்று உரை’ என்ன, குரிசில் கூறும்;

     (பின்னர்க்குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக - தன்
கணவனாய தயரதன்(இறந்தாரைச்) சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல;
தோன்றல் - (தன் மகனாகிய) பரதன்;துயர்க்கடலின் ஏக - துன்ப
வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி- அருட்கடலாகிய
இராமன்; கடுமை ஆர் கானகத்து  ஏக - கொடுமைபொருந்திய
காட்டிடத்தே செல்ல;(இவ்வாறு செய்து) கழல்கால் மாயன்- கழலணிந்த
காலையுடைய  திருமால்;  நெடுமையால் -(வாமனனாக வந்த மாவலி)
பால் மூவடி மண்கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்;
அன்று -முற்காலத்தே; அளந்தஉலகு எல்லாம் - மூவடியில் ஈரடியால்
அளந்த எல்லா உலகங்களையும்; (திருமால் போல அவதாரம் எடுத்துச்
சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும்கொடுமையால்
அளந்தாளை
- தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற
கொடுமையினால்(எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை;  “ஆர்
இவர்” என்று உரை’ என்ன-
இவர் யார்என்று சொல்லுக என்று கேட்க;
குரிசில் - பரதன்; கூறும்- சொல்வான்ஆயினன்.

     “சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலை” என்று
கோசலையையும், “அறந்தானேஎன்கின்ற அயல் நின்றாள்” என்று
சுமித்திரையையும் கூறிய கம்பர், ஒரு பாடல் முழுதுமாகக்கைகேயியின்
கொடு மனத்தைக் கூறிப் பரதனுக்கும் மேலாகத் தன் ஆற்றாமையைப்
புலப்படுத்தினார்எனலாம். ‘இவர் யார்’ என்று கோசலையை வினாவி,
‘அன்பின் நிறைந்தாளை உரை’ என்றுசுமித்திரையை வினாவிய குகனை
‘ஆர்  இவர்’ என்று சுட்டின்முன் வினாவை வைத்து வினாவச் செய்த
கம்பரின் சொல்நயம் உணரத்தக்கது. மற்றவரோடு அவள் இசைவொட்டாது
நின்றபடியைக் குகன்கண்டுகொண்டதை இந்த வினா வேறு பாடு காட்டி
நிற்கும்.  திருமால் மிக அரிது  முயன்று செய்தசெயலை இவள் எளிதாகச்
செய்தாள் என்றார் கம்பர். இராமாவதார நோக்கத்தை நிறைவேற்றியவன்
அவள் அன்றோ என்பதை நினைத்தார் போலும்.                    68