பரதன் கைகேயியைக் குகனுக்கு அறிமுகம் செய்தல் 2371. | ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை, தன் பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும் உயிர்ப் பாரம் குறைந்து தேய, உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் உலகத்தே, ஒருத்தி அன்றே, இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல், இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’ |
‘படர்எலாம் படைத்தாளை - துன்பங்களை எல்லாம் உண்டாக்கினவளை; பழிவளர்க்கும் செவிலியை -உலக நிந்தை என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; தன்பாழ்த்த பாவிக் குடரிலே - தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; நெடுங்காலம் கிடந்தேற்கும் -நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்; உயிர்ப்பாரம் குறைந்து தேய - உயிர் என்கின்றசுமை குறைந்து தேயும்படி; உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே- உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும்படி உள்ள உலகத்தின்கண்; ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை- இவ் ஒருத்தி மட்டும் அல்லவாதுன்பமே இல்லாத முகம் உடையவள்; இவளை, அறிந்திலையேல் - (இவ்வளவு நேரம் முகத்தைக்கண்டே அறிந்து கொண்டிருக்கவேண்டும், அப்படி) அறியவில்லையானால்; இந் நின்றாள் - இதோ இருக்கின்றவள்; என்னைஈன்றாள் -என்னைப்பெற்ற கைகேயி யாவாள்,’ பரதன் தன் மனத்துள்ளே தன் தாயைப் பற்றிக் கொண்டிருந்த துக்கம் அனைத்தையும் தன்மனத்திற்கு இனிய சகோதரனாகிய குகன்பால் கொட்டித் தீர்த்த அற்புதமான பாடல் இது. உயிர்அன்பை வளர்க்கும்; உடலோடு சேர்ந்து அன்பை அறுத்தபடியால் பிரிவுத் துயர்க்கொடுமையால் உடல் உயிரில்லாதவையாப் ஆயின. தான் செய்த கொடுமையை நினைத்து இரக்கப்படாதபடியால் பழிக்குப்பெற்ற தாயாக ஆனதோடு அன்றிச் செவிலியும் ஆனாள் கைகேயி. ‘நெடுங் காலம்’ என்பதனைவான்மீகத்தை ஒட்டிப் பன்னிரண்டு திங்கள் எனலும் ஆம். 69 |