குகன் கைகேயியை வணங்கலும் தோணி கரை சேர்தலும் கலிவிருத்தம் 2372. | என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும் தன் நல் கையின் வணங்கினன் தாய் என; அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே. |
என்னக் கேட்டு- (குகன்) பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு; அவ் இரக்கம் இலாளையும் - அந்தஇரக்கமற்றவளாகிய கைகேயியையும்; தன் நல் கையின் - தன் நல்ல கைகளால்; தாய் எனவணங்கினன் - தனக்குத் தாய் எனக் கருதி வணங்கினான்; தோணி - மரக்கலம்; அன்னப் பேடை- பெண் அன்னம்; சிறை இலது ஆய் - சிறகுகள் இல்லாமல்; கரை துன்னிற்றுஎன்னவும் - கரையை வந்து அடைந்தது என்று சொல்லலாம்படி; வந்தது - கரையை வந்தடைந்து. “மடமான் இரக்கம் இன்மையன்றோ இன்று இவ் உலகங்கள்இராமன், பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே” என்று முன்பும் கூறியவர் (1484)ஆதலால் இங்கேயும் ‘இரக்கம் இலாளை’ என்றார். மற்றத் தாயரைத் தாயர் என நினைத்துவணங்கினான் என்னாது வாளா கூறியவர் இங்கே கைகேயியைத் தாய் என வணங்கினான் எனக் கூறியதுகுகனுக்குக் கைகேயி சிறப்பு வகையிலும் தாயாதல் பற்றி; அதனை உணர்ந்தே குகன் தாய் எனவணங்கினன். அங்ஙனம் தன் தாயை வணங்கக் கிடைத்த அவன் கைகளை ‘நல் கை’ என்றதும் அறிக.கைகேயி வரம் வாங்கி இராமனை வனத்துக்கு அனுப்பாமல் இருந்திருப்பின் குகன் எப்படி இராமசகோதரனாக முடியும்; ஆகவே, குகனை இராம குடும்பத்தில் ஒரு சகோதரனாகச் சேர்த்தவள் கைகேயியைஅன்றிக் கோசலையும் சுமித்திரையும் அல்லர் என்பதைக் குறிப்பாகத் ‘தாய் என’ என்ற சொற்களால் பெற வைத்தார். தோணிகளுக்குச் சிறகுகள் இல்லையாதலின் பெண்ணன்னம் சிறைஇல்லாமல் கரைக்கு வந்தாற் போன்றது என்றாராம். ‘ஏ’ ஈற்றசை. 70 |