தாயர் பல்லக்கில் வர, பரதன் முதலியவர் நடந்து செல்லுதல்  

2373. இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்-
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் -
கழிந்தனன், பல காவதம் காலினே.

     (தோணியிலிருந்து) இழிந்த - இறங்கிய; தாயார் - தாய்மார்கள்;
சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த
புதுப் புனல்போயினான்
- கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில்
நடந்து  சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் - குகனும்
தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்;  காலில் பல காவதம்
கழிந்தனன்
- (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து
கடந்தான்.

     கண்ணிலிருந்து நீர் சிந்த. அதன் மேல் நடந்து பல காவதம் கடந்து
சென்றான் என்பதைப்புதுப்புனல் போயினான் என்றார். ‘ஏ’ ஈற்றசை.   71