பரதனைப் பரத்துவாச முனிவர் எதிர்கொள்ளல்  

2374. பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.

     (பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் - வினைச் சுமையிலிருந்து விலகிய;
பரத்துவன் - பரத்துவாசன்;  என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர்
மாதவன் வைகு இடம்
- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த
உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர - அன்பு மிக;
அணுகினன் - சேர்ந்தான்; அவன் - அப்பரத்துவாசன்; ஆண்டு -
அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு - அறுதொழில் உடைய
அந்தணரோடு;  எதிர்மேவினான் - எதிர்கொண்டு வந்தான்.

     விருத்தி -தொழில். இங்கு ‘ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆம்.’                                72