பரதன் வணங்க பரத்துவாசத முனிவர் ஆசி கூறி வினாவுதல் கலிவிருத்தம் 2375. | வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும் தந்தை ஆம் எனத் தாழ்ந்த, வணங்கினான்; இந்து மோலி அன்னானும் இரங்கினான், அந்தம் இல் நலத்து ஆசிகல் கூறினான். |
அம் மைந்தனும்- அந்தப் பரதனாகிய மகனும்; வந்த மா தவத்தோனை - (தன்னை எதிர்கொள) வந்த பெரியதவசியாகிய பரத்துவாச முனிவனை; தந்தை ஆம் என - (தன்) தந்தையைப் போலக் கருதி; தாழ்ந்து - (பணிவுடன்) விழுந்து; வணங்கினான் - வணக்கம் செய்தான்; இந்துமோலி அன்னானும் - சந்திரனைச் சடாமுடியில் தரித்த சிவபிரானை ஒத்த அம் முனிவனும்; இரங்கினான் - (பரதனிடம்) பிரிவு கொண்டவனாய்; அந்தம் இல் நலத்து ஆசிகள் -முடிவில்லாத நன்மைகளைத் தரவல்ல ஆசிமொழிகளை; கூறினான் - மொழிந்தான். இந்து - சந்திரன், மோலி - சடாமுடி. மௌலி என்பது மோலி என வந்தது. தவச்சீலமும்,சடாமுடியும், காமனைக் காய்தலும் உடைமையால் பரத்து வாச முனிவனுக்குச் சிவபிரான் உவமைஆயினார். 1 |