பரதன் பதில் கேட்டு, பரத்துவாசன் மகிழ்தல்  

2377.சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
‘“எனக்கு அடுத்தது இயம்பினை நீ” என்றான்;
‘உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!’ என்றான்.

     (அது கேட்ட பரதன்) சினம் கொடுந் திறல் சீற்ற வெந்தீயினான் -
கோபமாகியமிக்க வலிபடைத்த எழுச்சியுடைய கொடிய நெருப்பை
உடையவனாகி; மனக்கடுப்பினன் - மனம்கொதித்து;  மா தவத்து
ஒங்கலை
- பெரிய தவமலையாகிய பரத்துவாசனை (நோக்கி); ‘உரவோய்!-
பேரறிவை உடையவனே!; நீ-; ‘எனக்கு அடுத்தது இயல்பிலை’- எனக்குப்
பொருந்திய சொற்களைச் சொல்லவில்லை; என்றான்-; (மேலும் நீ இவ்வாறு
கூறியது); ‘உனக்கு அடுப்பது அன்றால்’ - உன் தநிலைமைக்குப்
பொருத்தமானது அன்று; என்றான்-.

     எந்தச் சொல்லைக் கேட்டுத் துன்பமும் துடிப்பும் உடையவனாய்க் காடு
நோக்கி வந்தானோஅதனையே முனிவன் கூறக் கேட்டலின் பரதனுக்குச்
சினத்தீ சீறி எழுந்தது. ‘நின்பால் இயைந்துஅடுத்த பேர் அரசு’ என்றான்
பரத்துவாசன். தவவலிமை உடையவனாகவும், அறிவோனாகவும்
இருக்கின்றவன் நியாய அநியாயங்களை உணர்ந்து கூறாமல் மூத்தவன்
இருக்க இளையவன் அரசு புரிதலைக்கூறுதலின் ‘உனக்கு அடுப்பது
அன்றால்’ என்று கூறினான். சீற்றத்தால் இடைவிட்டுத் துடித்துப்பேசதலுக்
கேற்ப என்றான் என்று இருமுறை இக் கவியிற் கூறியது ஒரு நயம். உரம் -
அறிவு “உரமொருவற்குள்ள வெறுக்கை” (குறள்.600)                   3