2378. | மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல், ‘பின், முறையின் நீங்கி, முது நிலம் கொள்கிலேன்; இறைவன் கொள்கிலன் ஆம்எனின், யாண்டு எலாம் உறைவென் கானத்து ஒருங்கு உடனே’ என்றான். |
மறையின் கேள்வற்கு - வேத நாயகனான இராமனுக்கு; மன் இளந்தோன்றல்- பொருந்திய தம்பியான பரதன்; ‘பின் முறையின் நீங்கி- இராமனுக்குத் தம்பி என்கின்ற முறையிலிருந்து விலகி; முதுநிலம் கொள்கிலேன் -தொன்றுதொட்டு வந்த கோசல அரசை எற்றுக்கொள்ளேன்; இறைவன் கொள்கிலன் ஆம் எனின்- இராமன் அரசை ஏற்றுக்கொள்ளானாயின்; யாண்டு எலாம் - அவன் வனத்தில் வசிக்கும் பதினான்கு யாண்டுகளும்; கானத்து ஒருங்கு உடனே உறைவென்’ - காட்டில் அவனோடு சேர்ந்துஅவனுடனேயே தங்குவேன்; என்றான் - என்று கூறினான். மறையின் கேள்வன்-வேத நாயகன். கேள்வன் என்றால்நாயகன் எனப் பொருளாம் ஆதலின், வேதநாயகன் என்றாம். “வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி,விட்டான்” (7424.) என்பதும் காண்க. இனி, மறையின் கேள்வன் என்பது பரத்துவாச முனிவனைக்குறித்துக் கூறியதாகக் கோடலும் ஆம். அப்பொழுது ‘மன்’ என்பதற்கு இராமன் என உரைக்க.இராமனோடு வனத்துறைதல், இராமனை இணைபிரியாது சேர்ந்துறைதல் இரண்டும் அடங்க ஒருங்கு, உடன்என்று இருசொற்கள் பெற்தார். 4 |