2379.உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து
இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம்,
குரைத்த மேனியோடு உள்ளம் குளிர்ந்ததால் -
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே.

     உரைத்த - (இவ்வாறு பரதன்) கூறிய; வாசகம் கேட்டலும் -
மனத்திறந்தசொற்களைக் கேட்ட அளவில்;  உள்  எழுந்து  இரைத்த
காதல்
- (இராமனிடத்தில்)உள்ளேயிருந்து புறப்பட்டுப் பொங்கிய
அன்பினை உடைய; இருந்தவத்தோர்க்கு எலாம் - பெரிய
தவமுனிவர்களுக்கு எல்லாம்; அரைத்த சாந்து கொடு அப்பியது என்ன-
நன்றாகஅரைத்த சந்தனத்தைத் கொண்டுவந்து பூசியதுபோல; குரைத்த
மேனியொடு உள்ளம்
-பூரித்தஉடம்போடு மனமும்; குளிர்ந்தது -
குளிர்ச்சி அடைந்தது.

    தவத்தோர் - பரத்துவாசனோடு உடன் இருந்த முனிவரரையும் கூட்டி,
முன்பே இராமன்பால் கழிபெருங்காதலுடையராய் அவன் வனம் புகுந்ததற்கு
இரங்கிய உள்ளம் உடையவராதலின் பரதன் சொற்கள்அவர்களை மேலும்
குளிர்வித்தன. மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல் வழக்கு. ஆல் - ஏ,
ஈற்றசைகள்.                                                    5