பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல் 2380. | ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன் தூய சாலை உறைவிடம் துன்னினான்; ‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா, தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். |
தீயின்- (ஓம வேள்வியின் ஆக்கிய) நெருப்பில்; ஆகுதிச் செல்வனும் -ஆகுதிகளை இட்டுச் செய்கின்ற வேள்விச் செல்வனாகிய பரத்துவாசனும்; ஆய காதலோடு -மேலிட்டெழுந்துஉள்ளம் குளிர்ந்த அன்போடு; ஐயனைக் கொண்டு - பரதனை அழைத்துக்கொண்டு;தன் - தன்னுடைய; தூய சாலை உறைவிடம் - தூய்மையானதங்கும் இடமாகிய தவச் சாலையை; துன்னினான் - சென்றடைந்தான்;‘மேய சேனைக்கு - பரதனுடன்வந்துள்ள சேனைகளுக்கு; விருந்துஅமைப்பென்’ எனாச் சிந்தித்தான்- விருந்து செய்வேன் என்று தன மனத்தில் கருதினான். வேள்விச் செல்வன் ஆதலின் தேவர்களையும், பிறவற்றையும் வருவித்து விருந்து செய்யஇயன்றது என அறிக. ‘சேனைக் கமைப்பெண் விருந்து’ என்பது பரதனையும் உள்ளடக்கியதேயாம்;அன்றி, பரதன் விருந்து அருந்தாமையின் அவன் தவக்கோலம் கண்டு அவனை விடுத்துச் சேனையை மட்டுமே பரத்துவாசன் கருதினன் எனலும் ஆம். சேனை என்று கூறினும் உடன்வந்தார், தாயர்,பரிசனங்கள் அனைவரையும் கருதும் என்க. 6 |