2382. | நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என, அந்தரத்தின் அரம்பையர், அன்பினர், வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை, இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். | நந்தல் இல் அறம் - எஞ்ஞான்றும் கெடுதல் இல்லாத அறத்தை; நன்தினர் ஆம் என - பெருகச் செய்து அதன்பயனாய சுவர்க்காதி இன்பங்களைத் துய்ப்பார் இவர் ஆம் என்று கருதி; அந்தரத்தின் அரம்பையர் - தேவருலகத்தில் உள்ள அரம்பை மாதர்; அன்பினர்- அன்புடையராய்; உவந்து வந்து - மகிழ்ச்சியுடன்வந்து; மைந்தரை - ஆடவர்களை; எதிர் ஏத்தினர் - வரவேற்றுக்கொண்டாடி; இந்துவின் சுடர்கோயில்- நிலாவைப்போல ஒளி விளங்கும் அரண்மனைக்குள்; கொண்டு ஏகினார் - அழைத்துக்கொண்டு சென்றார்கள். நந்து என்னும் சொல் வளர்ச்சி, கேடு என்னும் இருபொருள் உடையது. - நந்தல் - கெடுதல் - நந்தினர் - வளர்ச்சிபெற்றார் எனப் பொருள் காண்க. ‘அறம் செய்து சுவர்க்கம் புக்கான்’ (தொல், சொல். சேனா. கிளவி. 58.) என்பவாதலின் இங்ஙனம் கூறினார். ‘ஆம்’ என்பதை அசை எனலும் ஆம். 8 |