2383. | நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்; தான மாமணிக் கற்பகம் தாங்கிய ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். |
(அரம்பையர் மைந்தர்க்கு) நானம் - (கஸ்தூரி முதலியவற்றாலாய) வாசனைப்பொடியை; நன்கு உரைத்தார் - நன்றாக உடம்பில் பூசினர்; நளிர் வானிடை ஆன -குளிர்ந்த ஆகாயத்திடத்தில் உள்ள; கங்கை அரும்புனல் ஆட்டினார். கங்கைநதியின் அரிய நீரால் முழுக்காட்டி; தான மா மணிக் கற்பகம் - தேவருலகத்தில் உள்ளபெரிய அழகிய கற்பக மரங்கள்; தாங்கிய - சுமந்த; ஊனம் இல் மலர் ஆடை -குறைவு இல்லாத மலர்களால் ஆகிய ஆடையை; உடுத்தினார் - அணிவித்தார்கள். நானம் - கஸ்தூரி. இங்கு அதுமுதலாகிய, கூட்டுப் பொருளாகிய கண்ணம் குறித்தது. மலர் ஆடை -மலரே ஆடையாம்; பூத்தொழில் பொதிந்த ஆடையும் ஆம். தான - வண்மைக்குணம் உடைய (கற்பகம்)என உரைத்தலும் ஒன்று. 9 |