2387. | மாதர் யாவரும், வானவர் தேவியர் கோது இல் செல்வத்து வைகினர் - கொவ்வை வாய்த் தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர், தாதிமார் எனத் தம் பணி கேட்பவே. |
மாதர் யாவரும்- (பரதனுடன் வந்த) மகளிர் எல்லாரும்; கொவ்வை வாய்த்தீது இல் தெய்வ மடந்தையர் - கொவ்வைக் கனி போலச் சிவந்த வாயினை உடைய தீமையற்றதேவ மகளிர்; சேடியர் தாதிமார் என - தோழிப் பெண்களும், குற்றேவல் மகளிரும்போல்; தம் பணி கேட்ப - தாம் இட்ட வேலைகளை நிறைவேற்ற; வானவர் தேவியர் கோது இல் செல்வத்து - வானுலகத்துத் தேவர் மகளிரது குற்றமற்ற செல்வத்தில்; வைகினர்- இன்புற்றிருந்தனர். ஆடவர் அரம்பை மகளிர் இன்பம் துய்த்தலால் மகிழ்ந்தனர். மகளிரோ மற்றுத் தேவப்பெண்களைப் பணிகோடலால் மகிழ்ந்தனர் என்றவாறாம். தெய்வமடந்தையர் வானவர் தேவியரின்வேறுபட்டவர் ஆவர். ‘ஏ’ ஈற்றசை. 13 |