2388.நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவினின்று,
அந்தர் வந்தென, அந்தி தன் கை தர,
மந்த மந்த நடந்தது வாடையே.

     நந்து அம் நந்த வனங்களில் - (அங்குள்ள) வளர்ச்சி பெற்ற
அழகியபூந்தோட்டங்களில்; நாள் மலர்க் கந்தம் உந்திய கற்ப்கக்
காவின் நின்று -
அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் பெருக வரும் கற்பகச்
சோலைகளிலிருந்து; அந்தி தன் கை தர- மாலைப்பொழுது கை
கொடுத்துவ; அந்தர் வந்து என - குருடர் நடந்ததுபோல;  வாடை-
வாடைக் காற்று;  மந்த மந்த நடந்தது - மெல்ல மெல்ல மணம் வீசி
வந்தது.

     கற்பகச் சோலைகளிலிருந்து வந்த வாடைக் காற்று அங்குள்ள
பூந்தோட்டங்களின் நறுமணம்பெருக வருதலால் மெல்ல மெல்லக் குருடர்
போல நடந்தது  என்றார். அதிரக் குளிர் செய்து  வரும்வாடையும் மந்த
மாருதமாக ஆயினது  மலர்களின் நறுமணம் கலத்தலான் என்க. வாடை -
வடக்கிருந்து வரும் குளிர் காற்று.  அது  தென்றல் ஆகாமை  உணர்க,
திசைப்பெயராதலின்.  தென்றல் - மந்தமாருதம்.  இங்கு வாடையும் மந்த
மாருதமாயிற்று  என்றது நயம் மந்த மந்த - அடுக்கு ‘ஏ’ஈற்றசை.       14