2590. | நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்; கர கதக் கரி கால் நிமிர்த்து உண்டன; மரகதத்தின் கொழுந்து என வார்த்த புல் குரகதத்தின் குழாங்களும் கொண்டவே. |
கர கதக் கரி - துதிக்கையை உடைய கோபமுற்ற யானைகள்; நரகதர்க்கு -நரகத்தை அடைய வல்ல பாவிகளுக்கும்; அறம் நல்கும் - புண்ணியப் பயனைத் தந்து (அந்நரகத்திலிருந்து) அவரை மீட்க வல்ல; உண்டன - கால்களை நிமிர வைத்துப் பருகின; குரகத்தின் குழாங்கள் - குதிரைக் கூட்டங்கள்; மரகதத்தின் கொழுந்து என வார்ந்தபுல்- மரகத மணியின் ஒளிக்கொழுந்துபோல் பசிய நீண்ட புல்லை; கொண்ட - உட்கொண்டன. யானைகள் நீர் உண்டதும், குதிரைகள் புல் உண்டதும் கூறியபடி. நரகு அதர்க்கு ‘எனப்பிரித்து, நரக வழிக்கு அறம் நல்கும் எனப் பொருள் உரைத்தலும் ஒன்று. நீர் தேவகங்கைநீர். தீர்த்த விசேடம் ஆதலின் பாவத்தை மாற்றும் தன்மை படைத்தது என்றாராம். ‘ஏ’ஈற்றசை. 16 |