பரதன் காய் கிழங்கு உண்டு, புழுதியில் தங்குதல் 2391. | இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன் துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான், அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல் பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். |
யாவரும் - எல்லோரும்; இன்னர் - இத்தன்மையராய்; இன்னணம் - இவ்வாறு; இந்திரன் துன்னு போகங்கள் - இந்திரன் அனுபவிக்கின்ற இன்பங்களை; துய்த்தனர் - அனுபவித்தார்கள்; தோன்றல் - பரதன்; அன்ன காயும் கிழங்கும்உண்டு - அத்தகைய காயும், கிழங்கும் ஆகியவற்றை உண்டு; பொன்னின் மேனி -பொன்மயமான தன்னுடம்பு; பொடி உற - புழுதி படும்படி; அப் பகல் -அந்நாளை; போக்கினான் - கடத்தினான். அனைவரும் இனிது உறங்கப் பரதன் விரதவொழுக்கத்தோடு நாளைக் கடத்தினன் என்றவாறாம்.‘அன்ன காயும்’ என்பதில் ‘அன்ன’ உரையசையாக வந்ததாகக் கொள்க. இனி ‘கற்பகமரத்திலிருந்து கிடைத்த’ என்பாரும் உளர். ஆயின் அது உலக இன்பத்துக்கு முரணானதாக ஆகிப்பரதனது விரதவொழுக்கத்துக்குப் பங்கமாதலின் அவ்வாறுரைத்தல் ஏலாதாம். ‘தான்’ என்பதும்உரையசை. 17 |