கதிரவன் தோன்றுதல்  

2392.நீல வல் இருள் நீங்களும், நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற,
ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான்.

     நீலம் - நீல நிறம் உள்ள;  வல் இருள் - திணிந்த இருளானது;
நீங்களும் - நீங்கிய அளவில்; நீங்குறும் - தாறும் இல்லாமல் போகி
விடுகிற; மூலம் இல் - அடித்தளம் அற்ற; கனவின் - கனவு போல;
திருமுற்றுற -சேனைகள் அனுபவித்த செல்வ போகம்  முடிவடையும் படி;
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு -பொருந்திய புண்ணியப் பயனை
அனுபவிப்பவர்க்கு;  ஈறுசெல் காலம் என்ன - அது  முடிவடையும்
காலம்போல;  கதிரவன் - சூரியன்;  தோன்றினான் -.

     கங்குற் பொழுது நீங்கியது; கதிரவன் தோன்றினான்; முன்பு பரதனுடன்
வந்தோர்அனுபவித்த போகமும் முடிவுக்கு வந்தது.  இதனைக் கனாப்போல
என்றார். புண்ணியம் முடிந்த பின்னர்மீண்டும் சுவர்க்கத்திலிருந்து
மண்ணுலகிற்கு வருவார்போல அவர்கள் நிலை ஆகிறது ஆகலின் “ஈறு
செல் காலம் என்ன” என்று கதிரவன் தோற்றத்தைவருணித்தார்.        18