பரதன் படைகள் தம் நிலை அடைதல் 2393. | ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர், தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார், மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். |
ஆறி நின்று - (மனம், மொழி, மெய்களால்) அடங்கி; அறம் ஆற்றலர் -அறத்தைத் செய்யாதவர்களது; வாழ்வு என - செல்வபோகம் (இடையில் அழிதல்) போல; செல்வம் - (பரதனுடன் வந்தார் அனுபவித்த) செல்வம்; பாறி வீந்தது -சிதறிக் கெட்டது; மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார் - விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகிற்கு வந்து பிறந்தது போன்ற தன்மை அடைந்தவராய அவர்கள்; பரிந்திலர் -தாம் இழந்துவிட்ட ஒருநாள் போகத்துக்காக இரங்க வில்லை; தேறி - தெளிந்து; முந்தைத் தம் சிந்தையர் ஆயினார் - முன்பு தமக்குள்ள நினைவுகளை உடையவர்களாக ஆனார்கள். அறம் உள்ள துணையும் செல்வம் இருந்து அறம் நீங்கியதுபோது செல்வமும் நீங்கும் ஆதலின், அறம் ஆற்றலர் வாழ்வு எனக் செல்வம் பாறி வீந்தது. வீந்தது என்னாது ‘பாறி’ என்றது பிறர்க்குக் கொடுத்தலால் செல்வம் வீதலும் உண்டு ஆதலின், அவ்வாறின்றிச் சிதறிக் கெட்டது என்றதாம். அறம் ஆற்றலர் வாழ்வு நல்வழியில் கெடாது தீவழியில் கெடும். 19 |