பரதன் படைகள் சித்திரகூடத்தை அடைதல்  

2398.வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரவடம் சேர்த்ததால் -
ஒன்ற உரைத்து, ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே.

     ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ என ஒன்று உரைத்து - உயிரைவிட
நல்லொழுக்கமேசிறந்து விளங்குவது  எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே
உரைத்து; பொன்றிய புரவலன் -உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது;
பொரு இல் சேனை - ஒப்பற்ற சேனையானது; வன்தெறு பாலையை -
கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது-
(முன்கூறியவாறு  நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால்) மருதநிலம்
ஆகும் என்று கருதிஎளிதாகக் கடந்து சென்று; சித்திரகூடம் சேர்ந்தது-
சித்திரகூட மலையை அடைந்தது.

     பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால் வழி
வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலாற் குளிர்ச்சியானதாலும் ஆம்
என மேற் கூறினார்.உயிரை இம்மை மறுமை வீடு என்னும் மூன்று இடத்தும்
பயன்கொள்ள வைப்பது ஒழுக்கம் ஆதலின்,‘உயிரினும் ஒழுக்கம் நன்று’
எனப்பட்டது. “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம், உயிரினும்ஓம்பப்
படும்” (குறள்131.) என்பதனை ஒப்பு நோக்குக. ‘ஏ’ ஈற்றசை. ‘ஆல்’ அசை.24