பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றம் அடைதல்  

2400.எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம்
கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின்மேல்;
செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான்.

     (பரதன் சேனைகள் வரும் நிலையைத் தன் குறிப்பால் உணர்ந்து)
இளையவன் -இலக்குவன்;  எழுந்தனன் - எழுந்து;  நிலம் கொழுந்து
உயர்ந்தனையது ஓர் நெடியகுன்றின்மேல் ஏறினான்
- நிலவுலகம்
கொழுந்துவிட்டு உயர்ந்தாற் போன்றதான ஒருநீண்டுயர்ந்த மலையின் மேல்
ஏறி;  செழுந்திரைப் பரவையை - வளவிய அலைகளையுடையகடலை;
சிறுமை செய்த - சிறியது  எனக் கருதும்படி செய்த; அக் கழுந்து உடை
வரிசிலைக் கடலை
- அந்த வலிமை மிக்க கட்டமைந்த வில்லை ஏந்திய
சேனைக் கடலை;  நோக்கினான் - பார்த்தான்.

     நலத்தின் மேல் உள்ள நெடிய மலை, நிலம் கொழுந்துவிட்டு
உயர்ந்தது  போல் உள்ளதுஎன்றார். தற்குறிப்பேற்றம். சேனைக் கடலின்
பெருமை நோக்கியவழி கடல் சிறியதாக  உள்ளது.கழுந்து - வலிமை.
“கழுந்தோடும் வரிசிலைக்கைக் கடற்றானை” (237.) எனப் பாலகாண்டத்து
வருதல்காண்க. கழுந்து - வில்லின் கழிப் பகுதியாகும் என்பதும் ஒன்று.
வில்லை இடையறாது கையிற்பிடித்தலால் தேய்ந்து  வழுவழுப்பாதலைக்
‘கழுந்து’ எனக் கூறுவதாகவும் பொருள் உரைப்பர்.இளையவன் எழுந்து,
ஏறி, நோக்கினான் என முடிக்க.                                  26