2401. ‘பரதன், இப் படைகொடு,
     பார்கொண்டவன், மறம்
கருதி, உள் கிடந்தது
     ஓர் கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன் மேல்
     வந்தான்; இது
சரதம்; மற்று இலது’ எனத் தழங்கு
     சீற்றத்தான்.

     ‘பார் கொண்டவன் பரதன் - நிலத்தைக் கைக்கொண்டு
ஆள்பவனாகிய பரதன்; இப்படை கொடு - இந்தச் சேனையைக் கொண்டு;
மறம் கருதி - போர்த் தொழிலைக்கருதி;  உள் கிடந்தது  ஓர் கறுவு
காதலால்
- தன் மனத்தகத்தே தங்கிய வஞ்சனையோடுகூடிய
பேராசையால்;  விரதம் உற்று இருந்தவன்மேல் வந்தான் - தவ விரதம்
மேற்கொண்டுள்ள இராமன்மேல் பிடையெடுத்து வந்துள்ளான்; இது சரதம்-
இதுவே உண்மை; மற்று இலது’ - வேறு ஒன்றும் இல்லை; எனத் தழங்கு
சீற்றத்தான்
- என்று எண்ணிமிக்க கோபம் உடையவனாய்.....(மேல் முடியும்).

     பதினான்கு ஆண்டு முடிந்த பின்னர் மீண்டு வந்து தன் அரசைக்
கவர்ந்து  கொள்வானேஎன்கின்ற கருத்தால் படையெடுத்து வந்துள்ளான்
என நினைக்கும் இலக்குவன் அதனையே ‘உள்கிடந்தது ஒரு கறுவு காதல்’
என்றான்.                                                     27