இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல்  

2402.குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ
மதித்ததனன்; இராமனை விரைவின் எய்தினான்;
‘மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்’ என்றான்.

     (இலக்குவன் சீற்றத்தானாய்) குவடு நீறு எழ மிதித்தனன், பாரிடைக்
குதித்தனன் -
மலை உச்சி பொடுபடும்படி (மிகுந்த வேகத்தோடு) மிதித்துத்
தரையிலே குதித்து;  விரைவின் -வேகமாக;  இராமனை எய்தினான் -
இராமனை வந்தடைந்து;  ‘பரதன் மதித்திலன் -பரதன் நின்னை ஒரு
பொருளாகக் கருதாமல்; மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்-
மதில் சூழ்ந்த அயோத்தி நகரத்துப் பெருஞ் சேனைப் பரப்பினை
உடையவனாய்; நின்மேல்வந்தான் - உன்மேல் போர்க்கு வந்தான்;’
எனா - என்று கூறி......(மேல்முடியும்).

     இராமனை மதியாது  பரதன் போர்க்கு வந்தான் என்றான் -‘மதில்
பதி’ என்றது அயோத்தியை. சேனை உடன் வந்ததே இலக்குவனது ஐயத்தை
உறுதிப் படுத்துவதாகஅமைந்தது என்பது இதனால் வெளியாம்.        28