இலக்குவன் வீர உரை 2404. | ‘இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள் பருமையும், அன்னவன் படைத்த சேனையின் பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என் ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. |
‘இருமையும் இழந்த - இம்மை, மறுமை இரண்டையும் சேர இழந்த; அப் பரதன் ஏந்துதோள் பருமையும் - அந்தப் பரதனது உயர்ந்த தோளின் பருத்த தன்மையும்; அன்னவன்- அப் பரதன்; படைத்த சேனையின் - பெற்றுள்ள சேனையின்; பெருமையும் -பெருமையையும்; நின்பின்பு வந்த - உனது பின்னாலே வந்த; ஒரு என் - தனியான என்னுடைய; ஒருமையும் - ஒப்பற்ற தன்மையையும்; கண்டு - (இப்போது) பார்த்து; இனி நீ உள்ளம் உவத்தி - இனிமேல் நீ மனமகிழ்ச்சி அடைவாயாக...... அண்ணன் மேல் போர்தொடுத்து வந்தான் எனவே அறத்துக்கு மாறுபட்டான்; இருமையும் இழந்தான்என்றானாம். யான் ஒருவனே அத்துணைச் சேனைகளையும் அழிப்பதைப் பார் என்றானாம். 30 |