2406. | ‘கருவியும், கைகளும், கவச மார்பமும், உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல திரிவன - சுடர்க் கணை - திசைக் கை யானைகள் வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ. |
‘வீர! நீ - இராமனே ! நீ; கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின -எதிரிகளது ஆயுதங்களையும், கரங்களையும், கவசமணிந்த மார்பகத்தையும் உருவிக்கொண்டு; உயிரினோடு - அவர்கள் உயிரையும் உடன்பற்றி; உதிரம் தோய்வு இல -இரத்தத்தில் சிறிதும் தோயாமல்; சுடர்க்கணை - என்னுடைய ஒளிபடைத்த அம்புகள்; திசைக்கை யானைகள் - எட்டுத் திசைப் பக்கத்திலும் உள்ள யானைகளும்; வெருவர- அஞ்சும்படி; திரிவன செய்வன - சுற்றித் திரிதல் செய்வனவற்றை; காண்டி -பார்ப்பாயாக.... அம்புகள் உடலிற் பாய்ந்து உருவியும் உதிரம் தோயாமல் இருத்தலின் அவற்றைக் கண்டுதிசையானைகள் வெருவின. கை திசையொடு வருதலின் பக்கமாம். 32 |