2408.‘பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால்,
வின் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி - வள்ளல்! நீ

     ‘வள்ளல் - இராமனே;  நீ  -;  பண் முதிர் - அழகு மிக்க;
களிற்றொடு
- யானைகளோடு; பரந்த சேனையின் எண் - பரந்துபட்ட
படைகளின்கணக்கை;  முதல் அறுத்து - அடியோடு போக்கி;  நான்
இமைப்பில் நீக்கலால்
-நான் கணநேரத்தில் அழித்தலால்,  (இவை
அனைத்தும் வீர சுவர்க்கம் அடைந்து  விண்ணில்ஏறலாம்);  விண் முதுகு
உளுக்கவும்
- விண்ணுலகம் முதுகு நெளிக்கவும்;  மண் -மண்ணுலகம்
(பாரம் நீங்குதலின்);  முதுகு ஆற்றவும் - முதுகு வலி நீங்கப் பெறவும்;
காண்டி - பார்ப்பாயாக....

     பண் -அலங்காரம். பண்ணுதல். கை செய்தல், அலங்கரித்தலாம். எண்
முதல் அறுத்தல் -இல்லாதபடி செய்தல் ஆகும். போரில் இறந்தோர்
வீரசுவர்க்கம் பெறுவர் ஆதலின், எல்லாச்சேனைகளும் இறந்து விண்ணுலகு
பெற்றதனால் விண் முதுகுவலி எடுத்து நெளிக்கலாயிற்று. இனி -உளுக்க’
என்பதற்கு இற்று  உளுத்துப் போய் விழ’ எனவும்  உரைக்கலாம். பூபாரம்
நீங்கலின்மண் முதுகு ஆற்றியது என்றானாம்.                      34