2411. | ‘ஆள் அற; அலங்க தேர் அழிய; ஆடவர் வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி தாள் அற, தலை அற; புரவி தாளொடும் தோள் அற - வடிக் கணை தொடுப்ப - காண்டியால். |
‘ஆள் அற - போர் வீரர்கள் அறுபட; அலங்க தேர் அழிய - அசைகின்றதேர்கள் அழிய; ஆடவர் வாள் அற - வாள்வீரர்கள் வாளொடு அற்று விழ; வரிசிலைதுணிய - கட்டமைந்த வில்கள் துண்டுபட; மாக் கரி - பெரிய யானைகள்; தாள்அற தலை அற - தாளும் தலையும் துண்டபட்டு விழ; புரவி - குதிரைகள்; தாளொடும் தோள் அற - கால்களோடு தோள்கள் துண்டுபட; வடிக் கணை - கூரிய அம்புகளை; தொடுப்ப - யான் செலுத்த; காண்டி - பார்ப்பாயாக...
ஆள் என்றது தேர்மேல் நின்ற ஆளும் ஆம். ‘ஆல்’ ஈற்றசை. 37 |